சிறப்புச் செய்தி

மித்ராவின் கடந்த காலமும் நிகழ்காலமும் நூல் வடிவில் வெளியீடு

25/04/2024 08:55 PM

பெட்டாலிங் ஜெயா, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்திய சமுதாய நலனுக்காக அரசியல் கட்சிகள் உட்பட அரசாங்கத்தின் கீழ் செயல்படும் அமைப்புகள் மற்றும் அரசு சாரா இயக்கங்கள், பல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகின்றன.

அச்செயல்பாடுகள் குறித்து முழுமையான தகவல்கள் மக்களைச் சென்றடையாத பட்சத்திலேயே, உண்மை நிலவரங்கள் தெரியாமல், பல தவறான கருத்துகள் எழுகின்றன.

அதேபோன்ற ஒருநிலை, மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா மீது இருக்கக் கூடாது என்பதற்காகவும், அவ்வமைப்பின் செயல் திட்டங்கள் மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் 'MITRA: PAST AND PRESENT AND FUTURE POSSIBILITIES' எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் துறை அமைச்சின் கீழ் இயங்கி வந்த, செடிக் எனப்படும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு பின்னர், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மித்ராவாக மறுபெயரிடப்பட்டது.

2008 தொடங்கி, 2014, மற்றும் 2018 என்று தனது தோற்றத்திலும் தலைமைதுவத்திலும் பல மாற்றங்களைக் கண்டிருந்தபோதிலும், மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களையே அது வகுத்து வந்தது.

இந்நிலையில், மித்ரா கடந்து வந்த பாதைகளையும் அதன் செயல்திட்டங்களையும் தொகுத்து ஓர் ஆய்வு நூலாக மக்களுக்கு கொடுக்கவே தாம் இம்முயற்சியை மேற்கொண்டதாக 'MITRA: PAST AND PRESENT AND FUTURE POSSIBILITIES' நூலாசிரியர் பேராசிரியர் டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூரியா கூறினார்.

''மித்ராவைப் பற்றி மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த காலம் மற்றும் நிகழ்கால திட்டங்கள் அனைத்தும் முக்கியமானவை. அதனைக் கருத்தில் கொண்டே ஓர் ஆய்வு நூலாக வெளியிட்டிருக்கிறோம்,'' என்றார் அவர்.

இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கீடு செய்யும் நிதிகள், அதன் செலவுகள், குறித்து அறிந்துக் கொள்ளவே பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகளும் விவாதங்களும் எழுகின்றன.

அதற்கான விளக்கத்தை நூல் வடிவில் தாம் கொடுத்திருப்பதாகவும் டாக்டர் டெனிசன் ஜெயசூரியா தெரிவித்தார்.

''ஆரம்பத்தில் இருந்து யாரும் நூல் வடிவில் தகவல்களை வெளியிடவில்லை. அதனை நாங்கள் முன்னெடுக்க முயற்சித்தோம். அந்த முயற்சியே இன்று நூல் வடிவில் வெளியாகியுள்ளது,'' என்றார் அவர்.

இந்நூலானது, பொது மக்களுக்கு மட்டுமல்லாது மித்ரா தலைமைத்துவம், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என்றும் அவர் கூறினார்

ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் வரும் காலத்தில் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு 60-க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்திருந்தனர்.

பிரதமர் துறை துணை அமைச்சர் எம்.குலசேகரன் இந்நூலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502