பொது

தேர்தல் காலங்களில் பொய்யான செய்திகளை நம்பாதீர்

25/04/2024 08:35 PM

கோல குபு பாரு, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- கோல குபு பாரு இடைத்தேர்தலை மஇகா புறக்கணித்ததாக கூறப்படும் பொய்யான செய்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

வாக்காளர்களை குழப்புவதற்கு எதிர்கட்சிகளின் தந்திரங்களில், இதுவும் அடங்கும் என்று அரசியல் தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கோல குபு பாரு இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க, மஇகா ஒத்துழைக்காது என்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பொய்யான செய்திகள் பகிரப்பட்டன.

ஆனால், இந்தியர்களின் நலனுக்காக இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் களம் இறங்குவதாக ம.இ.கா நேற்று உறுதிப்படுத்தி இருந்தது.

எனவே, வாக்காளர்கள் உறுதி செய்யப்படாத எந்தவொரு செய்தியையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று சில அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

''ம.இ.கா நேற்றுதான் தேர்தல் நடவடிக்கை மையத்தை திறந்து வைத்தனர். அவ்வாறு இருக்கும் போது, எப்படி புறகணிப்பதாக கூற முடியும். எதிர்கட்சிகள் பரப்பும் செய்திகள் முற்றிலும் பொய்யானது,'' என்றார் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்.

''என்னைப் பொருத்தவரை, இது எதிர்கட்சிகளின் நாடகம். கோல குப் பாரு மக்கள் தெளிவாக செயல்பட கூடியவர். நிச்சயமாக சரியான தலைவர்களையே தேர்தெடுப்பார்கள்,'' என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கூறினார்.

''பொய்யான செய்திகளை நம்புவதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, தற்போது எந்த தரப்பு நல்ல திட்டங்களை செய்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்,'' என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இன்று, அங்கு நடைபெற்ற மித்ராவின் இந்திய மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர், அவர்கள் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502