பொது

தீ வைக்க முயன்றதாக கர்ப்பிணி உட்பட 4 வட்டி முதலைகள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

24/04/2024 09:06 PM

ஜோகூர் பாரு, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த மாதம் நால்வரை தீயைக் கொண்டு மிரட்டியதாக நம்பப்படும் மூன்று மாத கர்ப்பிணி உட்பட நான்கு வட்டி முதலைகள் இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினர். 

மார்ச் 10-இல் இருந்து மார்ச் 27-ஆம் தேதிகளுக்கிடையில் ஜோகூர் பாரு, உலு திராம் மற்றும் தாமான் அபாட் சுற்று வட்டாரப் பகுதியில் மூன்று பேரின் வீட்டையும் காரையும் சேதப்படுத்தும் நோக்கத்துடன் தீ வைக்க முயன்றதாக முதல் நான்கு குற்றச்சாட்டுகள் அப்துல் ஹலிம், வீனு சியூ மென் யிங் மற்றும் நூர் அஸ்மான் ஹாசான் மீது சுமத்தப்பட்டது.  

மார்ச் 15-ஆம் தேதி உலு திராமில் ஒரு பெண்ணின் வீட்டை சேதப்படுத்தும் நோக்கத்துடன் தீ வைக்க முயன்றதாக ஐந்தாவது குற்றச்சாட்டு அப்துல் ஹலிம், சியூ மற்றும் லியூ சூன் கியான் மீது சுமத்தப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் முறையே 14 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் உட்பட அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 435 மற்றும் செக்‌ஷன் 436-இன் கீழ் இவ்வழக்கு பதிவாகியுள்ளது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]