BREAKING NEWS   Agong ucap tahniah kepada TPM Singapura Lawrence Wong yang bakal dilantik PM Singapura yang baharu | His Majesty Sultan Ibrahim King of Malaysia congratulates Singapore DPM Lawrence Wong for being next Singapore PM | His Majesty Sultan Ibrahim King of Malaysia thanked outgoing Singapore PM Lee for being a close friend to Johor and Malaysia | 
 சிறப்புச் செய்தி

போதுமான பணியாளர்கள் இல்லாவிடில் நகைக் கடைகளை மூடுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை

27/04/2024 08:39 PM

லெபோ அம்பாங், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியர்களின் பாரம்பரியத் தொழில் துறைகளில் தங்க வணிகம் மிகவும் பழைமை வாய்ந்த வியாபாரமாகும்.

நாட்டில் நகைக்கடை வியாபாரம் தொடங்கப்பட்டது முதல் வருமான வரி உட்பட அனைத்து விதமான கட்டணங்களையும் இந்திய நகை வியாபாரிகள் அரசாங்கத்திற்கு முறையாக செலுத்தி வருகின்றனர்.

ஆனால், இத்துறைக்காக ஒதுக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் தருவிப்பு எண்ணிக்கை குறித்து, இதுவரை எவ்வித நடவடிக்கையும் இன்றி, அரசாங்கம் மௌனம் காத்து வருவது தமது தரப்பிற்கு மிகுந்த கவலை அளிப்பதாகக் கூறுகிறார், மலேசிய இந்திய பொற்கொல்லர் மற்றும் நகை வணிகர் சங்கத் தலைவர் டத்தோ அப்துல் ரசூல். 

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில், நகை, ஜவுளி கடைகள் ஆகியவற்றுடன் முடிதிருத்தும் கடைகளுக்கும் சேர்த்து மொத்தம் 7,500 அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு அனுமதி அளித்திருந்தார்.

ஆனால், அந்த அனுமதியில் இடம்பெற்றுள்ள செயல்முறைகளும் நிபந்தனைகளும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது என்று அவர் வருந்தினார்.

"ஆயிரம் சதுரமீட்டர் மூவாயிரம் சதுர அடி உள்ள கணக்கை எடுத்துக் கொண்டால் ஒரு கடைக்கு 75,000 வீதம் மூன்று கடைகளுக்கு இரண்டு லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் வாடகை செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வாறு செய்த பிறகு பத்தில் இரண்டு அந்நிய தொழிலாளர்களை மட்டுமே தருவிக்க வாய்ப்பு வழங்குவார்கள். இவை இன்றைய நிலைக்கு சாத்தியமான ஒன்றா," என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தமது சங்கத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் 220 நகைக் கடைகளில் பெரும்பாலானவை 50 ஆண்டுகள் பழைமையானவை.

தற்போதைய நிலவரத்தினால், அவ்வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் அடுத்த தலைமுறையினர் அதில் முழுமையாக ஈடுபடுவதில் சுணக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் பல நகைக் கடைகள் முறையான நடத்துநர்கள் மற்றும் உரிமையாளர்கள் இன்றி மூடுவிழா காணும் என்று அப்துல் ரசூல் அச்சம் தெரிவித்தார்.

இதனிடையே, அந்நிய நாட்டினரைத் தருவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், உள்நாட்டினரை பணியமர்த்தும் சாத்தியம் குறித்தும் அவரிடம் வினவப்பட்டது.

"உள்நாட்டவர்களைச் சேர்ந்தவர்களை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கு மூவாயிரம் ரிங்கிட் வரையில் ஊதியம் தர வேண்டும். அத்தகைய பணியாளர்களில் பலர் இங்கு வேலையைக் கற்றுக் கொண்டு சிங்கப்பூரில் கூடுதல் சம்பளத்திற்கு வேலை செய்ய சென்றுவிடுகின்றனர். சிலர் உள்ளூரிலேயே நகைக் கடையும் திறந்துவிடுகிறார்கள். இதனால் நன்கு வேலைத் தெரிந்தவர்கள் இன்று கடை மீண்டும் ஆட்டம் காணத் தொடங்கிவிடும். இதுவே அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்தினால் அவர்களுக்கு கணிசமான ஊதியத்தை வழங்குவதோடு, கூடுதல் நேரமும் அவர்கள் வேலை செய்வர்," என்று அவர் விவரித்தார்.

வேலைவாய்ப்பு வழங்கப்பட்டாலும் வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே அவர்கள் வேலை செய்ய முன்வருவதாகவும் அப்துல் ரசூல் கூறினார்.

அதுமட்டுமின்றி, மருத்துவ விடுப்பு, குடும்பம் மற்றும் போக்குவரத்து பிரச்சனை உள்ளிட்ட பலவற்றைக் காரணம் காட்டியும் அவர்கள் வேலைக்கு வராமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில் பத்தாயிரம் ரிங்கிட்டிற்கு மேல் நகை வாங்குவோருக்கு ஆடம்பர வரி வசூலிக்கப்படலாம் என்று அண்மையில் அரசாங்கம் அறிவித்திருப்பது, தமக்கு மனநிறைவளிக்கவில்லை என்றார், அப்துல் ரசூல்.

"தற்போது நகை வாங்குவோரில் பெரும்பாலானோர் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலே அதைப் பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு ஒரு ஆயிரம் ரிங்கிட்டிற்கு சிறிய நகை வாங்கிய பின்னர் மூன்று மாதம் கொடுத்து அதை திரும்ப வந்து மாற்றுவர். வாங்கும் போது கூடுதலாக நூறு ரிங்கிட் கொடுத்து விற்கும் போது கூடுதலாக நூறு ரிங்கிட் செலவழித்து இதில் புதிதாக வாங்கும் நகைக்கும் வரி விதித்தால் அவர்களால் வாங்கு முடியுமா?," என்றார் அவர்.

எனவே, பத்தாயிரம் ரிங்கிட்டிற்கு பதிலாக ஐம்பதாயிரம் ரிங்கிட்டிற்கு மேல் ஒரு நகையை வாங்குவோருக்கு வேண்டுமென்றால்,  ஐந்து விழுக்காடு வரையில் ஆடம்பர வரி வசூலிப்பது ஏற்று கொள்ளக்கூடியது என்றும் அப்துல் ரசூல் கூறினார்.

இன்று பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது அவர் அத்தகவல்களை நம்மோடு பகிர்ந்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)