BREAKING NEWS   Selangor FC umum tarik diri pada Piala Sumbangsih 2024, tidak kompromi isu keselamatan pasukan | 
 பொது

நாட்டில் 5ஜி பயன்பாடு விகிதம் 36%-ஐ அடைந்துள்ளது

26/04/2024 06:27 PM

பாடாங் பெசார், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மத்தியில் வரையில், நாட்டில் 5ஜி பயன்பாடு விகிதம் 36 விழுக்காட்டை அடைந்துள்ளது.

அதே வேளையில், கடந்த பிப்ரவரி மாதம், அச்சேவையின் அனுகல் விகிதம் 80.3 விழுக்காட்டை எட்டியுள்ளது.

இதற்கு முன்னர், கடந்தாண்டு நவம்பர் மாதம் வரையில் 5ஜி பயன்பாடு மிகக் குறைவாக அதாவது 12-லிருந்து 15 விழுக்காட்டில் மட்டுமே இருந்த வேளையில், இது ஒரு சிறந்த அடைவுநிலையாகும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''எனவே, ஐந்து, ஆறு மாத காலத்தில் 15 விழுக்காட்டில் இருந்து குறைந்தது 35 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 36 விழுகாட்டை அடைந்துள்ளது. குறிப்பாக, ஏற்படுத்தப்பட்டிருக்கும் 5ஜி திட்டங்களை அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கான 5ஜி திட்டத்தை ஏற்படுத்த 5ஜி இணைப்பு சேவையை வழங்குபவர்களுடன் பேச்சு நடத்துவதை கருத்தில் கொள்வதற்கு ஆராயுமாறு நான் அண்மையில் எம்சிஎம்சி தரப்பைக் கேட்டுக் கொண்டுள்ளேன்,'' என்றார் அவர்.

பெர்லிஸ், பாடாங் பெசார் உதாரா தேசிய இடைநிலைப்பள்ளியில், வடக்கு மண்டல 'Rangkaian Gentian Optik Point of Presence (PoP)' தளத்தைப் பார்வையிட்ட பின்னர் ஃபஹ்மி செய்தியாளர்களிடம் அவ்வாறு குறிப்பிட்டார்.

5ஜி சேவையின் இரண்டாம் இணைப்பு குறித்த அரசாங்கம் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மற்றொரு நிலவரத்தில், நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் குறைந்த விலையிலான மற்றும் விரைவான இணைய சேவை வழங்கும் வகையில் தமது அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து சில பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.

12-வது மலேசியா திட்டத்தின் கீழ் Optik PoP இணைப்பை நிர்மாணிப்பதன் மூலம் 437,000 வளாகங்கள் 2025 இறுதிக்குள் அதிவேக இணைய சேவையை பெறும் என்று அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)