பொது

துன் முஹமட் ஹனிஃபின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது

20/04/2024 07:22 PM

கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் துன் முஹமட் ஹனிஃப் ஒமாரின் நல்லுடல் இன்று மாலை 3.15 மணிக்கு கோலாலம்பூர், புக்கிட் கியாரா இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.

2013-ஆம் ஆண்டில் மரணமடைந்த அவரின் மகன் அஹ்மட் ஜமால் ஒமார் கல்லரைக்கு அருகில் அவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், துன் முஹமட் ஹனிஃபிற்கு அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் செலுத்தும் இறுதி மரியாதையாக தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன், அவரின் சவப்பெட்டி மீது ஜலூர் கெமிலாங்கை கொண்டு மூடினார்.

சிறுநீரகம் செயலிழந்ததினால், 85 வயதான முஹமட் ஹனிஃப், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள தமது இல்லத்தில் உயிரிழந்தார்.

1974-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி 1994-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை நான்காவது தேசிய போலீஸ் படை தலைவர் பதவி வகித்தார்.

இந்த இறுதி சடங்கில், அவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பிடிஆர்எம் -இன் உயர்மட்ட அதிகாரிகள் என்று சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, காலஞ்சென்ற முஹமட் ஹனிஃப் பிடிஆர்எம் -இன் சகாப்தம் ஆவார் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் தெரிவித்தார்.

நீண்ட காலமாக அதாவது 20 ஆண்டுகளாக போலீஸ் படைத் தலைவராக பணியாற்றிய அவர், உறுப்பினர்களின் நலனைக் காப்பதிலும், போலீஸ் படையை மேம்படுத்தவும் பங்காற்றியவர் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

இன்று, முஹமட் ஹனிஃப் இல்லத்தில் அவருக்கு இறுதி மரியாதை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)