BREAKING NEWS   Federal Gov't agrees for LTSIP runway to be extended by 400 metres for it to be upgraded as international airport - PM Anwar | Federal Gov't agrees to allocate over RM20 million to purchase pipes to draw water for use by people and for farming in Kelantan - PM Anwar | Piala Thomas: Malaysia bertemu China di separuh akhir selepas tuan rumah singkirkan juara bertahan India, 3-1 | Kerajaan Persekutuan setuju landasan LTSIP dipanjangkan 400 meter untuk dinaik taraf sebagai lapangan terbang antarabangsa - PM Anwar  | Thomas Cup: Malaysia to face China in the semi-finals after the hosts eliminate reigning champions, India, 3-1 | 
 சிறப்புச் செய்தி

சயாம்-பர்மா மரண ரயில் பாதை; உயிர்நீத்த தமிழர்களுக்கு 'நடுகல்

19/04/2024 07:54 PM

கோலாலம்பூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- ஜப்பானியர்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் உருவான சயாம்-பர்மா மரண இரயில் பாதை, மனித வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த ஒரு சம்பவமாகும்.

ஒரு லட்சத்திற்கு அதிகமான தமிழர்களின் உயிர்களைப் பறித்து, சோகத்தில் முடிந்த அந்த ரத்தச் சரித்திரத்திற்கு, அழகான முடிவுரை கொடுப்பதற்காக, அங்கு நினைவு சின்னம் ஒன்றை எழுப்பும் முயற்சி, தாய்லாந்தில் சாத்தியமாகி உள்ளது.

அம்மண்ணில் உயிர்நீத்த தமிழர்கள், காலம் கடந்தும் நினைவில் நிற்க வேண்டும் என்பதற்காக, பேங்காக் காஞ்சனாபுரி எனும் இடத்தில், நடுகல் உருவாக்கப்பட்டு, அதன் அதிகாரப்பூர்வ திறப்பு விழா, தொழிலாளர் தினமான மே முதலாம் தேதி நடைபெறவிருக்கின்றது.

1942-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சயாம் மரண இரயில் பாதையின் கட்டுமானப் பணிகள், 1943-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி நிறைவுச் செய்யப்பட்டது.

அதே ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதியே இந்த இரயில்பாதை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டது.

இந்த சயாம் மரண ரயில் பாதையை உருவாக்க சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஆசியத் தொழிலாளர்களும், 60 ஆயிரம் போர் கைதிகளும் கட்டாயப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

இது மலேசியத் தமிழர்களையும் உட்படுத்தி இருப்பதால், அப்பகுதியில் நினைவுச் சின்னத்தை எழுப்ப, டாக்டர் செல்வகுமார் தலைமையில், பேங்காக்கில் உள்ள மலேசியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் குழு மேற்கொண்ட முயற்சியில், இந்த நடுகல் நிறுவப்பட்டு திறப்பு விழா காணவிருக்கின்றது.

காஞ்சனாபுரியின் வாட் தாவ்ரோன் WAT THAWORN பகுதியில் உள்ள புத்தர் கோவில் வளாகத்தில்,
கட்டுமான பணியின்போது,

உயிரிழந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட இடத்தில், இந்த நடுகல் நிறுவப்படுவதாக, 28 ஆண்டுகாலம் அங்கு வசிக்கும் டாக்டர் செல்வகுமார் பெருமாள் கூறினார்.

அன்று, இரண்டாம் உலகப் போரின்போது, மரண ரயில் பாதையின் கட்டுமானப் பணிகளுக்கு தமது தந்தையும் உறவினர்கள் சிலரும் தொழிலாளியாக சென்றதாக கூறிய செல்வகுமார், பின்னர் 57 ஆண்டுகள் கழித்து, 2002-ஆம் ஆண்டு மீண்டும் தமது தந்தையை அங்கு அழைத்து சென்றதையும் நினைவு கூர்ந்தார்.

தமது தந்தையின் மறைவுக்கு பின்னர், இந்த வரலாற்றில் மாண்டவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற வேட்கை தமக்குள் உருவானதாக, அரச மலேசிய விமான படையில் 13 ஆண்டுகாலம் சேவையாற்றிய செல்வகுமார் குறிப்பிட்டார்.

''என்னைப் போல நிறைய குடும்பத்தினரின் தியாகங்களைக் கருத்தில்கொண்டு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றோம்'', என்றார் அவர்

இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அந்த நடுகல்லில் சிவபெருமான் தியானம் செய்வதை சித்தரிக்கும் வடிவமைப்புக் கொண்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

அதோடு, இந்தியாவின் மதுரையில் வடிவமைக்கப்பட்ட இந்த நடுகல், 2.5 மீட்டர் உயரம், 1.5 மீட்டர் அகலம் மற்றும் மூன்று டன் எடை கொண்டதாகும் என்றும் டாக்டர் செல்வகுமார் தெரிவித்தார்.

80 ஆண்டுகால வரலாறு கொண்டிருக்கும் இந்த மரண இரயில் பாதையில், உயிர் நீத்த தமிழர்களுக்கு இதுவரையில் எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்காத இருந்த நிலையில், இந்த நடுகல் அவர்களை உலக வாழ் அனைத்து தமிழர்களிடமும் கொண்டு சேர்க்கும் என்று கூறுகின்றார் டாக்டர் செல்வகுமார்.

வரும் காலங்களில், தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், அம்மண்ணில் உயிர் தியாகம் செய்த தமிழர்களுக்கு வீர் வணக்கம் செலத்த அங்கு பயணிக்கலாம் என்றும் அவர் பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.

இதனிடையே இந்த முயற்சியில், தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினரும் இணைந்துள்ளதால், இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 10 லட்சம் ரூபார் நிதியுதவி வழங்கி உள்ளார்.

மாவீரர் நினைவகமாக கருத்தப்படும் அந்த நடுகல், உழைப்பாளர்களுக்கு பெருமை சேர்க்கும் மே தினத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை திறப்பு விழா காண்பதால், பொதுமக்கள் குறிப்பாக மலேசியர்கள் வரவேற்கப்படுவதாக டாக்டர் செல்வகுமார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)