பொது

காதலியைக் கொலை செய்த ஆடவருக்கு மனநலப் பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு

19/04/2024 06:15 PM

ஷா ஆலம், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 23-ஆவது மாடியிலிருந்து தமது காதலியைத் தள்ளி கொலை செய்த லாரி ஓட்டுநரை தங்சோங் ரம்புத்தான் மருத்துவமனையில் மனநலப் பரிசோதனை மேற்கொள்ள ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட வி. நாதனின் மனநிலை சீராக இல்லாததாக நம்பப்படுவதால், அவருக்கு மனநல கண்காணிப்பு தேவைப்படுவதாக அவரின் வழக்கறிஞர் சிவாநந்தன் ராகவா விண்ணப்பித்ததற்கு அனுமதி அளித்து, மாஜிஸ்திரேட் முஹமட் ரெட்சா அஸ்ஹார் ரெசாலி அம்முடிவைச் செய்தார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு 10.02 மணிக்கு, சிலாங்கூர், செத்தியா அலாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 23-ஆவது மாடியிலிருந்த தாய்லாந்தைச் சேர்ந்த மவிகா லும்யாயை தள்ளி விட்டு, கொலை செய்ததாக நாதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சம்பந்தப்பட்ட அந்த லாரி ஓட்டுநரின் மனநலப் பரிசோதனை அறிக்கையைப் பெற, இவ்வழக்கின் மறு செவிமடுப்பை வரும் ஜூன் 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் சரியாக பதிலளிக்காததாலும், இதற்கு முன்னர் 2018-ஆம் ஆண்டில் விபத்தொன்றில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தக் கசிவு உண்டாகியதாகவும் சிவாநந்தன் தெரிவித்தார்.

எனவே, அவரைச் சிறைக்கு அனுப்பினால் அவர் தமக்கு தாமே ஏதும் தீங்கு விளைவித்துக் கொள்ளலாம் என்பதால் அவரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்புமாறு முன்னதாக, குற்றவியல் நடைமுறை சட்டம் செக்‌ஷன் 342-இன் படி சிவாநந்தன் விண்ணப்பம் செய்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)